இந்திய கடல்சார் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட "சாகர் அன்வேஷிகா" கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
கடல்சார் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சாகர் அன்வேஷிகா என்ற புதிய கப்பலை நாட்டுக்கு இன்று மத்திய சுகாதாரம் மற்றும் புவிசார் அறிவியல்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அர்ப்பணித்தார்.
2018ம் ஆண்டு கடல்சார் ஆராய்ச்சிக்காக சாகர் தாரா என்ற கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதே தொழில்நுட்பத்துடன் சாகர் அன்வேஷிகா என்ற 2வது கப்பல் உருவாக்கப்பட்டு வந்தது. அக்கப்பலை இன்று சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சாகர் அன்வேஷிகா கப்பலானது 43 மீட்டர் நீளம் உடையதாகும். மேம்பட்ட ஆய்வு உபகரணங்கள், நவீன வழிகாட்டும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கப்பலில் 8 விஞ்ஞானிகள், 12 ஊழியர்கள் என்று 20 பேர் பயணிக்க முடியும். கடல்சார் மற்றும் வளிமண்டல தரவுகளை சேகரிக்கும் பணியில் அக்கப்பல் ஈடுபட உள்ளது.
Comments